Tuesday, September 21, 2010
சென்னையில் 5000 நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினி!
தனது ரசிகர்களைச் சந்திக்க தயாராகிறார் ரஜினி. முதல் கட்டமாக சென்னையில் மட்டும் தனது ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகள் 5000 பேருக்கு அழைப்பு
விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். அப்போது, எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு நாம் பேசலாம். அரசியல், சமூக சேவை பற்றிய ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு குறித்து விவாதிக்கலாம் என்றார் ரஜினி.
அதற்கு அடுத்த வருடம் ஜனவரியில் ரசிகர்களை அழைத்து தனித் தனியாக புகைப்படங்களும் எடுத்து கொண்டார். அதன் பிறகு எந்திரன் படப்பிடிப்பில் பிஸியாகி விட்டார்.
வரும் அக்டோபர் 1-ம் தேதி எந்திரன் பிரமாண்டமாக ரிலீஸாகிறது. இதுவரை எந்த இந்தியப் படமும் இப்படி ரிலீஸானதில்லை என்று சொல்லும் வகையில் உலகம் முழுக்க 3000 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறார்கள்.
இதற்கிடையே ரஜினி மகள் சௌந்தர்யா திருமணம் சமீபத்தில் நடந்தபோது அத்திருமணத்துக்கு வர விரும்பினர் ரசிகர்கள் . இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் காரணங்களால் திருமணத்துக்கு ரசிகர்கள் அழைக்கப்படவில்லை.
ரசிகர்களை விரைவில் அழைத்து விருந்து கொடுப்பேன் என ரஜினி பின்னர் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. ரஜினி இமய மலை போய் வந்ததும், அடுத்த மாத இறுதியில் இச்சந்திப்பை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி- குழந்தைகளுடன் ரசிகர்களை அழைக்கலாம் என முதலில் திட்டமிடப் பட்டது. ஆனால் போக்குவரத்து செலவு, தங்குமிடம் போன்ற காரணங்களால் குடும்பத்தினருடன் வருவது கடினமான காரியம் என்பதால், ரசிகர்களை மட்டும் அழைக்க முடிவாகியுள்ளது.
யார்-யாரை அழைப்பது என்ற பட்டியல் தயாராகியுள்ளது. முதல் கட்டமாக மொத்தம் 5 ஆயிரம் பேர் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்த மான ராகவேந்திரா மண்டபத்தில் இந்தச் சந்திப்பு நடக்கிறது. அப்போது சவுந்தர்யா-அஸ்வின் தம்பதியை ரசிகர்கள் முன்பு ரஜினி அறிமுகப்படுத்துகிறார். அது முடிந்ததும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறார்.
இதே போன்ற சந்திப்புகளை திருச்சி , மதுரை மற்றும் கோவையிலும் நடத்துகிறார் ரஜினி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment