மைனா படம் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் நான் தூங்கவே இல்லை. அப்படியொரு பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியது அந்தப் படம் என்றார்
தயாரிப்பாளர் உதயநிதி.
பிரபு சாலமன் இயக்கத்தில், ஷாலோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள படம், ‘மைனா.’ இந்த படம் முழுக்க முழுக்க அத்துவான காட்டுக்குள் படமாக்கப்பட்டுள்ளது.
நடைமுறை நவீன உலகுக்கும் இந்தப் படத்தின் கதைக் களத்துக்கும் சம்பந்தமே இல்லை எனும்படி வித்தியாசமாக படமாக்கியுள்ளனர். விதார்த் என்ற கூத்துப்பட்டறை கலைஞரும், அமலா பால் என்ற அனகாவும் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் , ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மெண்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகிய இருவரும் இணைந்து வெளியிடுகிறார்கள். இதுபற்றிய அறிமுக கூட்டம் , சென்னை பார்க் ஷெராட்டனில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “மைனா படம் பார்த்துவிட்டு, 2 நாட்கள் நான் தூங்கவில்லை. அந்த அளவுக்கு படம் எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால்தான் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்த படத்தை வாங்கியது” என்றார்.
இயக்குநர் பிரபு சாலமன் கூறுகையில், “இந்தப் படத்துக்காக தமிழ்நாடு-கேரளா எல்லையில் ஒரு பள்ளத்தாக்கில் கிராமம் வேண்டும் என்று கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ மீட்டர் அலைந்து திரிந்து, கடைசியாக போடி பக்கமுள்ள குரங்கணி என்ற மலை கிராமத்தை கண்டுபிடித்தோம். இலையுதிர் காலம், மலைக்காலம், கோடை காலம், பனிக்காலம் என 4 காலகட்டங்களில், 68 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.
தமிழ் சினிமாவில் கிராமம் என்றால் செம்மண் பூமி, கரிசல் காடு, ஓடுகள் கலைந்த சுவர் இடிந்த வீடுகள்தான் ரசிகர்கள் மனதில் பதிவாகியிருக்கிறது. ஆனால், ‘மைனா’ திரைப்படத்தின் களம் எந்த திரைப்படத்தையும் ஞாபகப்படுத்தாது.
படப்பிடிப்புக்கு எந்த வித வசதியும் இல்லாமல் பொதி கழுதைகள் மூலம் காமிரா மற்றும் பொருட்களை எடுத்துக்கொண்டு, ஜெனரேட்டர் செல்ல முடியாததால், இயற்கை வெளிச்சத்தில் முழுப் படப்பிடிப்பையும் நடத்தினோம். குரங்கணியில் இருந்து புறப்படும் கதை மூணாறு, பூம்பாறை, முந்தல், போடி, தேனி, பெரியகுளம் வந்து முடிகிறது.
படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், 2.15 மணி நேரம் எங்கோ வேறு உலகத்துக்கு சென்று வந்தது போல் உள்ளது என்று கண்டிப்பாக கூறுவார்கள்…,” என்றார்
No comments:
Post a Comment